வயல்களில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி தேவை: கலெக்டர் அறிவுரை
கரூர், :'' வடகிழக்கு பருவமழை காலங்களில், வயல்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 2,978 டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் பயிர் சாகுபடிக்காக, 35 ஆயிரம் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுதானிய விதைகள், 12 மெட்ரிக் டன், பயறு வகைகள், 15 ஆயிரம் மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள், 3,500 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.கரூர் மாவட்டத்தில், இயல்பான ஆண்டு மழையளவு, 652.20 மி.மீ., நடப்பு ஆகஸ்ட் மாதம் வரை, 403.16 மி.மீ., மழை பெய்துள்ளது. அக்டோபர் மாதம் வரை, இயல்பான அளவை விட, 90.55 மி.மீ., மழை குறைவாக பெய்துள்ளது. விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காலங்களில், வயல்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், விமல்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தியாகராஜன் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.