கொடிவேரி தடுப்பணையில் போதை பயணிகளால் தொல்லை
கோபி;கொடிவேரி தடுப்பணைக்கு போதையில் வரும் சில சுற்றுலா பயணிகளால் பிறர் பாதிக்கப்படுகின்றனர்.கோபி அருகே கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளில், குடிபோதையில் வருவோர்களுக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு போதையில் வருவோரை கண்டறிய, தடுப்பணை நுழைவு வாயிலில் கடத்துார் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். வார விடுமுறை என்பதால் நேற்று காலை முதல், நுாற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இதில், 10:45 மணிக்கு, நுழைவுச் சீட்டுடன் வந்த மூன்று பேர் போதையில் இருந்தனர். இதனால் ஊர்க்காவல் படை வீரர்கள், நுழைவுச்சீட்டுக்கான பணத்தை திருப்பி வழங்கி, வெளியே அனுப்பும் முயற்சியில் இறங்கினர். மூவரும் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை வீடியோ பதிவு செய்த ஊர்க்காவல் படை வீரரை, மரியாதைக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மூவரும் மாயமாயினர். இதேபோல் தினமும் போதையில் அங்கு வந்து அட்டகாசம் செய்வோரால், பிற சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, பாசன உதவியாளர்களும் அவதியுறுகின்றனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம், கொடிவேரி தடுப்பணைக்கு, ஊர்க்காவில் படை வீரர்களுடன், கூடுதலாக போலீஸ் எஸ்.ஐ., ஒருவரை தினமும் பணியில் ஈடுபடுத்த பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.கலெக்டர் பரிசல் பயணம்ஈரோடு கலெக்டர் கந்தசாமி நேற்று மதியம், 1:45 மணிக்கு, கொடிவேரி தடுப்பணைக்கு வந்து ஆய்வு செய்தார். பரிசல் துறையை பார்வையிட்டு, லைப் ஜாக்கெட் அணிந்து பரிசல் பயணம் சென்றார். பரிசலை இயக்கும் மீனவர்களும் லைப் ஜாக்கெட் பயன்படுத்துவதை கண்டு பாராட்டினார்.