கரூர் அருகே பூங்காவில் உள்ள மின்சார பெட்டிகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
கரூர், ஜன. 4- கரூர் அருகே, பூங்காவில் சேதமடைந்துள்ள மின்சார பெட்டிகளை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தான்தோன்றிமலை நகராட்சியாக இருந்த போது, காந்தி கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கரூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த, 2008ல், பூங்கா வசதி ஏற்படுத்தப்பட்டது.பூங்கா நாள்தோறும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தது. சில பொருட்கள் திருட்டு போயின.இந்நிலையில் தான்தோன்றிமலை நகராட்சி, கரூர் நகராட்சியுடன் கடந்த, 2011ல் இணைக்கப்பட்டது. தற்போது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் காந்தி கிராமத்தில் உள்ள, பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கும் என பொது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பூங்கா பராமரிப்பு செய்யப் படவில்லை.இதனால், பூங்காவில் பல இடங்களில் முட்புதர்கள் முளைத்துள்ளன.அப்பகுதி மக்களால் காலை மற்றும் மாலை நேரங்களில், வாக்கிங் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், பூங்காவில் உள்ள மின்சார பெட்டிகள் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. எனவே, பூங்காவை சீரமைத்து பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.