தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம், மாயனுார், கட்டளை, திருக்காம்புலியூர், சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, கொம்பாடிப்பட்டி, வல்லம், புதுப்பட்டி, வீரவள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தென்னை மரம் சாகுபடி செய்து வருகின்றனர். தென்னை மரம் சாகுபடிக்கு வாய்க்கால் நீர் மற்றும் கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.பறிக்கப்படும் தேங்காய் சில்லரை விற்பனைக்காக, உள்ளூர் வாரச்சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை நடக்கிறது. மேலும் மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் தேங்காய்கள் பழனி, பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, கரூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது.தற்போது தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் வரத்து சரிந்துள்ளது. இதனால் ஒரு தேங்காய் விலை கடந்த மாதம், 15 ரூபாய்க்கு விற்றது, நேற்று 20 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் விலை உயர்வு காரணமாக, தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.