கரும்பு சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்; நிலத்தை பதப்படுத்தும் பணிகளில் ஆர்வம்
கரூர்: மேட்டூர் அணையில், தண்ணீர் திருப்திகரமாக உள்ளதால், கரூர் மற்றும் சுற்று வட்டார காவிரி யாற்று பகுதிகளில் உள்ள, கோரை புல் விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாற உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றை நம்பி, குறுவை, தாளடி மற்றும் சம்பா சாகுபடிகள் நடந்தது. ஆனால், 25 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக குறித்த காலக்கட்டத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், விவசாயிகள், பாய்கள் தயாரிக்க பயன்படும் கோரை புல் சாகுபடிக்கு மாறினர். இந்நிலையில் கடந்த, 2020, 2021, 2022, 2024ல், மேட்டூர் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்ததால், திட்டமிட்டபடி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த, 2023 மே, 23ல், முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை, தாளடி மற்றும் சம்பா சாகுபடிகள் கரூர் மாவட்டம் மட்டுமின்றி, டெல்டா பாசன பகுதிகளிலும் நடந்தது. தற்போது, மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம், 110 அடியை தாண்டிய நிலையில் இருந்தது.இதனால் வரும் ஜூன், 12ல் தொடர்ந்து, குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர். மேலும், தற்போது மேட்டூர் அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக காவிரியாற்றில் வினாடிக்கு, 4,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளில் தண்ணீர் உள்ளது. இதையடுத்து நொய்யல், புகளூர், தவிட்டுப்பாளையம், என்.புதுார், வாங்கல், நெரூர், புதுப்பாளையம், திருமுக்கூடலுார் உள்ளிட்ட பல்வேறு, காவிரியாற்று பகுதிகளில் பல ஆண்டுகளாக, கோரைபுல் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், கரும்புக்கு மாறி வருகின்றனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: பல ஆண்டுகளாக காவிரியாற்றில் போதிய தண்ணீர், குறிப்பிட்ட நேரத்தில் வராததால் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சில விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியவில்லை. மாறாக, தண்ணீர் தேவை குறைவாக உள்ள, கோரைபுல்லை பயிரிட்டோம்.கடந்த, சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், நெல் உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்ய முடிந்தது. தற்போது, மேட்டூர் அணையில் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளதால், கோரைபுல் பயிரிட்ட நிலங்களை, டிராக்டர் மூலம் பதப்படுத்தி, கரும்பு பயிரிட தயாராகி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.