மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன பேரணி
குளித்தலை, விவசாயிகள் கடன் பெற, சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறையை கைவிடகோரி, குளித்தலை வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன பேரணி நடந்தது.விவசாயி நச்சலுார் சுரேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் கலாராணி, மாநில குழு நாட்ராயன், மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் செல்வம், தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி, காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வளையப்பட்டி ஜெயராமன் ஆகியோர் பேசியதாவது:கடந்த மாதம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மூலம் அளித்த சுற்றறிக்கையில், விவசாயிகள் நகை கடன் பெறுவதற்கு ஒன்பது புதிய விதிமுறைகளை அறிவித்தது. விவசாயிகள் பலரும் எதிர்த்து வந்த நிலையில், அந்த அறிவிப்பை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அது முடிந்த சில நாட்களிலேயே, தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், இனி விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், கடன் வாங்கும் போது சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறை கொண்டு வரப்படும் எனவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றால் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்' என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒருமுறை நெல் பயிரிட்டு அறுவடை செய்யும் போது, ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் விவசாய பயிர் கடனாக, 35,000 மட்டுமே தரப்படுகிறது. மீதி உள்ள செலவுகளுக்கு அருகில் உள்ள மற்ற வங்கிகளில் தான் கடன் வாங்கும் சூழ்நிலை உள்ளது. சிபில் ஸ்கோர் அறிவிப்பு விவசாயத்தை மேலும் படுகுழியில் தள்ளும் செயல் என வலியுறுத்தி பேசினர்.இதையடுத்து, கோஷம் எழுப்பியபடி வந்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர், கூட்டுறவு சங்க சரக துணை பதிவாளர் திருமதியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.