கல்லு பாலத்தில் ஆகாய தாமரைகள் அகற்ற விவசாயிகள் வேண்டுகோள்
குளித்தலை, மேட்டுமருதுார் கல்லு பாலத்தில், ஆகாய தாமரைகள் தேங்கியுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, வடிகால் வாய்க்கால் மூலம் வெளியேறும் மழை தண்ணீர், சிவாயம் காட்டு வாரி, கொடிங்கால் வடிகால் வாய்க்கால்கள் மேட்டு மருதுார் கல்லுபாலத்தில் இணைகிறது. மேட்டு மருதுார் கல்லு பாலத்தில், இரண்டு வாய்க்கால்களும் இணையும் இடத்தில், ஆகாய தாமரைகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தேங்கி இருப்பதால், தண்ணீர் வெளியேற முடியாமல் தேக்கமடைந்து, விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது.இதனால் மருதுார், ராஜேந்திரம், பரளி, மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி பகுதிகளில் விவசாயம் செய்து வரும் நெல், வாழை விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தும், தேங்கியும் வருவதால் விவசாயம் பாதிக்கிறது. கல்லு பாலத்தில் தேங்கியுள்ள, ஆகாய தாமரைகளை குளித்தலை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.