பஸ்சுக்கு பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து
கரூர்: கரூர் அருகே பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 பழைய பஸ்களின் கூடுகள் எரிந்து நாசமாயின. கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்தவர் முருகன், 58; கோடங்கிப்பட்டி அருகே பெருமாள் பட்டியில், பழைய பஸ்களை வாங்கி உடைத்து, விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தில், நேற்று மாலை, 4:30 மணியளவில் பழைய பஸ்சில் இருந்து சீட்டுகளை, வெல்டிங் வைத்து இரும்புகளை பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சீட் பகுதி பஞ்சில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றும் பலமாக வீசியதால் மளமளவென தீ பரவியது. இதுகுறித்த தகவலின் படி வந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும், நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 16 பழைய பஸ்களின் கூடுகள் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.