உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அந்தியூரில் மீனவர்கள் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் மீனவர்கள் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

அந்தியூர், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில், மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் மீனவர் மாரியம்மன் கோவில் தெரு, தவிட்டுப்பாளையம், ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட இடங்களில், 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. 600 உறுப்பினர்களை கொண்ட பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார ஏரிகளில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு சங்கத்தினர் குத்தகைக்கு எடுத்த, வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்கும் உரிமம், கடந்த மாதம், 22ம் தேதியோடு முடிவடைந்தது. மீண்டும் மீன் பிடிக்கும் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, ஈவேரா உயிரின சரணாலயத்துக்குள் உள்ள அணையில், மீன் பிடிக்கக்கூடாது என, மாவட்ட வனத்துறை அனுமதி மறுத்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி, முதல்வர், மாவட்ட கலெக்டர், அந்தியூர் தாசில்தார், மீன்வளத்துறை ஆகியோருக்கு, மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனு சம்பந்தமாக நடவடிக்கை இல்லாததால் கடந்த, 25ம் தேதி குடும்பத்துடன் பிச்சை எடுத்துக் கொண்டே, ஈரோடு கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.இதையடுத்து தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில், தாலுகா அலுவலகத்தில் மீனவர் சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடந்தது. இரண்டு நாட்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், நேற்று காலை அந்தியூரில் உள்ள, 100க்கும் மேற்பட்ட மீனவர்களின் வீடுகளில் கறுப்பு கொடி கட்டியும், 50க்கும் மேற்பட்டோர் கொடியை கைகளில் ஏந்தியும் போராட்டம் நடத்தினர். மேலும், வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதியளிக்க, தமிழக அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில்,'மீன் பிடித்து வாழ்க்கை நடத்தும் எங்களுக்கு, இதை விட்டால் வேறு வழியில்லை. வருவாய் இல்லாததால், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட தடுமாற்றமாக உள்ளது. இது தொடர்ந்தால், தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை