ஊருக்குள் புகுந்து காட்டுப்பன்றி தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயம்
புன்செய்புளியம்பட்டி, வனப்பகுதியில் இருந்து வெளியேறி, பவானிசாகர் நகர் பகுதியில் ஆக்ரோஷமாக நடமாடும் காட்டுப்பன்றி, நேற்று ஒரே நாளில் இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை தாக்கியதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில், பவானிசாகர் நகர் வனத்தை ஒட்டியுள்ள பகுதி. இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி, பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்கெட் சதுக்கம் பகுதியில் ஹாயாக சென்றுள்ளது. அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் தேவகி, 60, என்ற பெண்ணை காட்டுப்பன்றி திடீரென தாக்கியதில், அவர் துாக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இதேபோல் குடில் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கந்தன் சாலையில் நடந்து செல்லும் போது அவரையும் தாக்கியுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் சைக்கிளில் சென்ற ஒருவர், டீக்கடை முன்புறம் நின்றிருந்த பெண், ஆண் ஒருவர் என மொத்தம் ஐந்து பேரை தாக்கியுள்ளது. இது அப்பகுதியில் உள்ள, சிசிடிவி கேமராக்களில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில், பவானிசாகரில் காட்டுப்பன்றி ஐந்து பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.