வரும் 2026ல் இ.பி.எஸ்.,ஐ முதல்வராக்க உழைக்கணும்: செங்கோட்டையன் அட்வைஸ்
கரூர்: ''வரும், 2026 சட்டசபை தேர்தலில், இ.பி. எஸ்.,ஐ முதல்வராக்க அனைவரும் இன்று முதல் உழைக்க தொடங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பேசினார்.தான்தோன்றிமலை ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், வெள்ளியணை அருகே, செல்லாண்டிப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில், நேற்று நடந்தது. அதில், அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பேசியதாவது:கடந்த, 1972ல் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை தொடங்கிய போது, இந்த கட்சி, 100 நாளை தாண்டாது என்று சொன்னார்கள். பின், 10 ஆண்டுகள் ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியை எம்.ஜி.ஆர்., நடத்தினார். எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்தவரை, கருணாநிதியால் முதல்வராக கோட்டை பக்கம் வர முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பின், ஜெயலலிதா முதல்வராகி, பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சியை நடத்தினார்.அதன் விளைவாக கடந்த, 2014ல் எம்.பி., தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. கடந்த, மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில், தமிழக மக்கள் விலைவாசி உயர்வால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதை பொதுமக்களிடம் கொண்டு சென்று, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தால் போதும். வரும், 2026ல் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இதனால், இன்று முதல் அ.தி.மு.க., நிர்வாகிகள், செயல்வீரர்கள், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,ஐ முதல்வராக்க உழைக்க தொடங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.