கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு விலை பாதியாக சரிந்தது
கரூர், கொத்தமல்லி தழை விளைச்சல் அதிகரித்துள்ளதால், வரத்தும் அதிகரித்து விலை குறைந்துள்ளது.கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொத்தமல்லி தழை ஒரு கிலோ, 70 முதல், 60 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் நடப்பு மாதம், கரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில், கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்தது. இதனால், புதிய கொத்தமல்லி தழை வரத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு வர தொடங்கியுள்ளது. இதனால், விலை குறைந்து வருகிறது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், கொத்தமல்லி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது. மழை காரணமாக, கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்தது. மேலும், தேனி மாவட்டம் சின்னமனுார், கம்பம், திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஒட்டன் சத்திரம் பகுதிகளில் இருந்தும் கொத்தமல்லி தழை வரத்து கரூர் மார்க்கெட்டுக்கு வர தொடங்கியுள்ளது.இதனால், கொத்தமல்லி தற்போது கிலோ, 40 முதல், 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. வரும் நவ., மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில், தை மாதம் வரை கொத்த மல்லி மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.