கரூரில் நிலத்தடி நீரை நம்பி நெல் சாகுபடி பணி தீவிரம்
கரூர்: கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பாசன பகுதியில் கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டார பகுதிகளில் நெல், சோளம் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவை பொறுத்து சாகுபடி நடக்கும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீர் திறக்கவில்லை, பருவ மழையும் கைகொடுக்கவில்லை என்பதால், அமராவதி ஆற்று பகுதியில் உள்ள கிணறு, ஆழ்குழாய் கிணறு மூலமாக நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.சோளம் அறுவடை முடிந்த நிலையில், நெல் சாகுபடிக்காக, அவுரி செடியை பயிரிட டிராக்டர் மூலம், நிலத்தை பதப்படுத்தியுள்ளனர். தற்போது நெல் நாற்று விடும் பணியை தொடங்கி உள்ளனர். நெல் சாகுபடிக்காக அமராவதி ஆற்றுப்பகுதிகளில் ஆந்திரா பொன்னி, ஐ.ஆர். 20 நெல் ரகத்தில் நாற்று உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.