உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒவ்வொருவருக்கும் தாய் மொழி பற்று அவசியம்

ஒவ்வொருவருக்கும் தாய் மொழி பற்று அவசியம்

கரூர்;''ஒவ்வொருவருக்கும் தாய்மொழி பற்று அவசியம் இருக்க வேண்டும்,'' என, கரூர் திரு.வி.க., மன்ற மேலாண்மை குழு உறுப்பினர் கவிஞர் செல்வம் தெரிவித்தார். கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஆட்சி மொழி கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. அதில், கரூர் திரு.வி.க., மன்ற மேலாண்மை குழு உறுப்பினரும், எழுச்சி கவிஞருமான செல்வம் பேசியதாவது:ஒவ்வொருவருக்கும் தாய்மொழி பற்று அவசியம் இருக்க வேண்டும். மொழி அழியாமல் இருந்தால் மட்டுமே, ஒரு சமூகம் நிலைத்து இருக்கும். ஜைன மதமும், பவுத்தமும் தமிழகத்தில் பெரு வளர்ச்சி அடைந்தபோது, தமிழை அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோர் மீட்டு எடுத்தனர். அதேபோல், சுதந்திர போராட்ட காலத்தில் தமிழ் மொழி மூலம், பாரதியார் சுதந்திர வேட்கையை உருவாக்கி, அனைவரையும் ஒருங்கிணைத்தார். தமிழின் தொன்மை பறைசாற்றும் வகையில், 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சூட்டினார்.அரசு அலுவலக கடிதங்கள், குறிப்புகள், வரைவுகளை தமிழில் பிழை இல்லாமல் எழுத, அரசு தமிழ் ஆட்சிமொழி அகராதியை வெளியிட்டுள்ளது. இதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக அரசு, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சி இயக்கம், சொற்பிறப்பு அகர முதலி திட்ட இயக்கம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்தி, தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருவதை பாராட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பயிலரங்கில், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தன், உலக திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், உலக திருக்குறள் மைய நிர்வாகி திருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி