உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றின் புதை குழிகளில் உயிரிழப்பை தடுக்க கம்பி வேலி அமைப்பது அவசியம்

ஆற்றின் புதை குழிகளில் உயிரிழப்பை தடுக்க கம்பி வேலி அமைப்பது அவசியம்

கரூர்:காவிரி, அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையால் ஏற்பட்ட, புதை குழிகளில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, கம்பிவேலி அமைக்க வேண்டும் என, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் விஜயன் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் அமலாக்கத்துறை ரெய்டுக்கு பின், அனைத்து குவாரிகளும் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளது. இருந்தபோதும் காவிரி, அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இங்கு, லாரிகளில் அள்ளப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் மணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் திருட்டு காரணமாக, ஆற்றில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள், புதை மணலில் சிக்கி பலியாகி உள்ளனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாயனுார் அருகில் காவிரி ஆற்று புதை மணலில் சிக்கி, மூன்று பேர் இறந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, கரூர் மாவட்டத்தில் மட்டும் மணல் கொள்ளை காரணமாக இதுவரை, 300க்கும் மேற்பட்டவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர். இது மட்டுமின்றி, மூடப்பட்ட கல்குவாரிகளில் தேங்கிய நீரில் சிக்கியும் பலர் இறந்துள்ளனர். எனவே, கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றில் புதை குழி உள்ள பகுதிகள், கல்குவாரி பள்ளங்கள் ஆகியவற்றின் அருகில் எச்சரிக்கை போர்டு வைத்து, கம்பி வேலி அமைக்க வேண்டும். அப்போது தான், மனிதர்கள், கால்நடைகளின் இறப்பை தடுக்க முடியும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை