கனக தோனியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
குளித்தலை, குளித்தலை அடுத்த கே.பேட்டை பஞ்., திம்மாச்சிபுரம் கிராமத்தில் உள்ள, கனக தோனியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா கோலாகலமாக நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த, 13 முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாக சாலையில் வைத்து முதல் காலை யாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை நடந்தது.பின்னர், யாக சாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அறங்காவல் குழு தலைவர் தங்கவேல், குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம், ஒன்றிய செயலர் தியாகராஜன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் கருணாகரன், விஜய விநாயகம் மற்றும் கிராம மக்கள். குடிப்பாட்டுக்காரர்கள் கலந்து கொண்டனர்.