கரூர் பஸ் ஸ்டாண்டில் தொழிலாளிக்கு கத்தி குத்து: சிதறி ஓடிய மக்கள்
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், மது போதையில் ஓட்டல் தொழிலாளியை, கத்தியால் குத்தி விட்டு இரண்டு பேர் தப்பி ஓடினர். அதிர்ச்சியில் பஸ்டாண்டில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள, கரூர் பஸ் ஸ்டாண்ட் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற நிலையில், புறக்காவல் நிலையமும் இல்லை. கரூர் டவுன் போலீசாரும், பஸ் ஸ்டாண்டுக்குள் ரோந்து பணிக்கு வருவது இல்லை. இதனால், பிக்கெட், மொபைல் போன் திருட்டு, மது போதையில் தகராறு, 24 மணி நேரமும் மது பாட்டில் விற்பனை உள்ளிட்ட, சட்ட விரோத செயல்களின் மையமாக கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கரூர் பஸ் ஸ்டாண்ட்டில், தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான குமார், 40, ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் வந்த இரண்டு பேர், குமாரின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். அதை கவனித்த பொதுமக்கள், கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நாலாபுறமும் சிதறி ஓடினர். கழுத்தில் கத்தி குத்து காயத்துடன், ரத்தம் வழிய நின்று கொண்டிருந்த, ஓட்டல் தொழிலாளி குமாரை, அங்கிருந்த சிலர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள், அரங்கேறி வருகிறது. அதை, கரூர் டவுன் போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.