கரூர்: கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, தி.மு.க., வினர் மீது கூறப்பட்ட புகார்களை மீண்டும் தூசி தட்டும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் கரூர் மாவட்டத்தில் புகாருக்கு ஆளான மேலும் பல தி.மு.க., வினர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பொறுப்பை ஏற்றவுடன், கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த நிலஅபகரிப்புகள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலமோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி. ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தி.மு.க., முன்னணி நிர்வாகிகள் மீது கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, அதில் சிலர் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நிலமோசடி தொடர்பாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., வாசுகியின் கணவர் முருகேசன், அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோர், நிலமோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தி.மு.க.,வினர் மீது பலர் புகார் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட போலீஸார், தி.மு.க., வினர் மீது வழக்கு கூட செய்யாமல் கண்டுகொள்ள õமல் இருந்தனர். சில புகார்களின் மீது கட்டப்பஞ்சாயத்து பே சப்பட்டு, புகார்தாரர்கள் திருப்பி அனுப்பட்டனர். அதில் ஒரு சில புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வழக்குபதிவு செய்யப்பட்டாலும், தி.மு.க., வினர் கைது செய்யப்பட்டவில்லை. போலீஸாரின் மெத்தன போக்கால், புகாருக்கு ஆளான தி.மு.க., வினர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று கைது நடவடிக்கையில் இருந்து தப்பினர். கரூர் மாவட்டத்தில் தி.மு.க., ஆட்சியின் போது கடந்த 2006 முதல் 2011 வரை, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் தி.மு.க., வினர் மீது கூறப்பட்ட நிலமோசடி, கொடுக்கல் வாங்கல் தகராறு உள்ளிட்ட வழக்குகளில் முன் ஜாமீன் பெற்றவர்கள் குறித்தும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் கடந்த ஐந்தாண்டில் தி.மு.க., ஆட்சியின் போது புகாருக்கும் ஆளான தி.மு.க., வினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.