நாளை கரூரில் கைத்தறி கண்காட்சி நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
கரூர், கரூரில், கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் வெங்கமேடு செங்குந்தர் கைக்கோள முதலியார் மண்டபத்தில், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (7ம் தேதி) நடக்கிறது. இதில், கல்லுாரி மாணவர்களுக்கு கைத்தறி ரகங்கள் குறித்த வடிவமைப்பு போட்டி நடத்தப்பட்டு, முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயமும், இரண்டு மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து அட்டை பெறுதல் மற்றும் கைத்தறி முத்திரை தொடர்பான விழிப்புணர்வு முறையே, தொழிலாளர் நலவாரியம் மற்றும் டெக்ஸ்டைல் கமிட்டி ஆகிய துறைகளால் வழங்கப்படவுள்ளது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும் சாதா பெட்ஷீட், ஜக்காடு பெட்ஷீட், துண்டு, தலையணை உறை, காட்டன் புடவைகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மருத்துவ முகாமில், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, நுரையீரல் சிகிச்சை, சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.