கரூரில் முப்பெரும் விழா நடக்கும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு
கரூர், கரூரில் முப்பெரும் விழா நடக்கும் இடத்தை, மூன்று அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு அருகே நாளை, தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், முப்பெரும் விழா நடக்கும் மேடை பணிகளை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி, தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது, அமைச்சர் பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது: வரும் தமிழக சட்டசபை தேர்தல் வெற்றி பாதைக்கு, முன்னோட்டமாக கரூரில் நடக்கும் முப்பெரும் விழா அமையும். இது விழாவாக இல்லாமல், மாநாடு போல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பல லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு, கூறினார்.