கரூரில் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி; அமைச்சர்கள் பங்கேற்பு
கரூர்: கரூரில் நடந்த, முதல்வர் திட்டத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி யில், அமைச்சர்கள் பங்கேற்றனர்.கரூர் மாவட்டம் மணவாடி, வெள்ளியணை, ஜெகதாபி, ஆண்டாங்கோவில் கிழக்கு, நெரூர் வடபாகம் ஆகிய இடங்களில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: இந்த திட்டத்தில் முதற்கட்டமாக நடந்த, 50 முகாம்கள் மூலம், 20,746 மனுக்களும், இரண்டாம் கட்டமாக ஊரக பகுதிகளில் நடந்த, 46 முகாம்கள் மூலம், 32,102 மனுக்களும் என மொத்தம், 96 முகாம் மூலம், 52,848 மனுக்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெற வேண்டும். மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, தாட்கோ மூலம் ஒரு பயனாளிக்கு கணினி மையம் அமைக்க, 8.01 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவித்தொகை, புதிதாக துணிக்கடை வைக்க, 5.54 லட்சம் மதிப்பில் கடன் உதவித்தொகையும், 9.54 லட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு சரக்கு வாகனம் உள்பட, 33 பயனாளிகளுக்கு, 57.19 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நிகழ்ச்சியில், கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ., இளங்கோ, மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.