குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவஸ்தை
கரூர்:கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தையொட்டி, அண்ணாசாலை செல்கிறது. இப்பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. அதை, மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அகற்றுவது இல்லை. இதனால், சாலையோரம் குப்பையை குவித்து தீவைத்து எரிக்கின்றனர். அதில், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களும் எரிவதால், துர்நாற்றமும், பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும், கரூர் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால், அண்ணா சாலையில் குப்பைக்கு, தீ வைத்து கொளுத்துவதை தடுக்க, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.