இன்னொரு மொழியை சீண்ட வேண்டாம் கமலுக்கு எம்.பி., ஜோதிமணி சுளீர் பதில்
கரூர் :''நம்முடைய மொழி உயர்வை உலகில் சொல்ல வேண்டுமே தவிர, இன்னொரு மொழியை சீண்ட வேண்டியது கிடையாது,'' என, கரூர் எம்.பி.,ஜோதிமணி கூறினார்.வாங்கல் குப்புச்சிபாளையத்தில் 'உழவரைத்தேடி வேளாண், உழவர் நலத்துறை திட்டம்' தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற, கரூர் எம்.பி., ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது: எல்லா மக்களும் அவர்களது தாய்மொழி பழமையானது என்பதை நம்புவர். ஒரு மொழியை தாழ்த்தியும், ஒரு மொழியை உயர்த்தியும் பேசினால் பிரச்னை வருவது இயல்பு தான். நாம் நிற்க வேண்டியது தமிழ் ஒரு செம்மொழி. அது, 3,000 ஆண்டுகள் பழமையானது அதற்கான வரலாற்று தரவுகளை நிறுவி இருக்கிறோம். நம்முடைய மொழி உயர்வை உலகில் சொல்ல வேண்டும் தவிர, இன்னொரு மொழியை சீண்ட வேண்டியது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று, கமல் கூறிய பேச்சுக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எம்.பி.,ஜோதிமணி இவ்வாறு கூறியுள்ளார்.