உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கரூர், கரூர் காவிரி ஆற்றங்கரையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும் தர்ப்பணம் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமானோர் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பர். ஆடி அமாவாசையான நேற்று ஆறுகள் மற்றும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதன்படி, கரூரில் நெரூர் காவிரி ஆற்றில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காலை முதலே காவிரி ஆற்றுக்கு வந்த பலரும், தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின், அவர்கள் பூஜை செய்து, பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின், வீடுகளுக்கு சென்றதும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனுார், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடினர். பின், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். * குளித்தலை, கடம்பன் துறை காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி, பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்ததாக, கடம்பவனேஸ்வரர் காவிரி தென்கரையில் அமைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடம்பனேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை ஆடி அமாவாசையை முன்னிட்டு குளித்தலை, பஞ்சப்பட்டி, அய்யர்மலை, தோகைமலை, தரகம்பட்டி உள்ளிட்ட, 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, பின்னர், கடம்பவனேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்று படுகை செல்லாண்டியம்மன் கோவில் அருகில், காவிரி ஆற்றில் மக்கள் குளித்து விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. பசு மாடுகளுக்கு அகத்தி கீரை வழங்கப்பட்டது. மாயனுார், கரூர், லாலாப்பேட்டை, புலியூர், திருக்காம்புலியூர், மகாதானபுரத்தை சேர்ந்த பலர் தர்ப்பணம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை