வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்
கரூர் :கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மற்றும் திருமாநிலையூர், பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலை சுற்றி, வீடுகள் வர்த்தக நிறுவனங்கள் பெருகி விட்டன. இதனால், கிளை வாய்க்காலில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளது. அதை அகற்ற, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விரைவில் அமராவதி அணையில், நெல் சாகுபடி பணிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளதால், மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் ஓடும் நிலை ஏற்படும். எனவே, கரூர் திருமாநிலையூர், பசுபதிபாளையம் பகுதி வழியாக செல்லும், கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.