வடகிழக்கு பருவமழை துவக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
பள்ளிப்பாளையம், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பள்ளிப்பாளையம் பகுதியில் பாதிப்புகளை தவிர்க்க, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கியுள்ளது. இது படிப்படியாக அதிகரித்து பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் வழக்கமாக, வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும். கனமழையால் வடிகால் தண்ணீர் அதிகளவு செல்லும், சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடும். கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையால், பள்ளிப்பாளையம் சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது. பல குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.மேலும், மழைக்காலத்தில், சாலை அதிகளவு சேதமடையும். பல இடங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடும். வடிகால் நிரம்பி, சாலையில் தண்ணீர் செல்லும். சாக்கடை அடைப்பு, மின் கம்பங்கள் சேதம், ஒயர் அறுந்து விழுதல், தேங்கிய தண்ணீரால் சுகாதார சீர்கேடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிப்புகளை தடுக்க, சேதத்தை சீரமைக்க மக்கள் நலன் கருதி, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.