கரூர் பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கரூர்: கரூர் தாலுகா பகுதிளில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது.இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:கரூர் தாலுகாவில், 22 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் நேற்றும், இன்றும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், வட்டார பொது சுகாதார மைய கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்கின்றனர்.அந்த வகையில், கோடாங்கிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்காக முன் பருவ கல்வி நடத்துவது குறித்தும் மற்றும் உணவின் தரம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் பார்வையிடப்பட்டது.இவ்வாறு கூறினார்.டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மாநகராட்சி கமிஷனர் சுதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.