கரூர் அருகே பூங்காவை பராமரிக்க பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
கரூர் கரூர் அருகே பூங்காவில், சேத மடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தாந்தோன்றிமலை நகராட்சியாக இருந்த போது, காந்தி கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கரூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த, 2008ல் பூங்கா வசதி ஏற்படுத்தப்பட்டது.பூங்கா நாள்தோறும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. சில பொருட்கள் திருட்டு போயின. இந்நிலையில் தாந்தோன்றிமலை நகராட்சி, கரூர் நகராட்சியுடன் கடந்த, 2011ம் ஆண்டு இணைக்கப்பட்டது. தற்போது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் காந்தி கிராமத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கும் என பொது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பூங்கா பராமரிப்பு செய்யப்படவில்லை. இதனால், பூங்காவில் பல இடங்களில் முட்புதர்கள் முளைத்துள்ளது. அப்பகுதி மக்களால் வாக்கிங் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, காந்திகிராமம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காவை சீரமைத்து பராமரிக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.