கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிழற்கூடம் அமைக்க வேண்டுகோள்
கரூர்: அடுத்த மாதம் முதல், கோடைக்காலம் நெருங்க உள்ளதால், கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிழற்கூடங்களை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளி உற்பத்தி, கொசுவலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டுமான தொழில் போன்றவை ஜரூராக நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், கரூருக்கு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர்.குறிப்பாக, திருச்சி செல்லும் சாலையில் உள்ள மணவாசி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாப்பேட்டை பகுதிகளில் இருந்து நிறைய தொழிலாளர்கள், பஸ்கள் மூலம் கரூர் வந்து செல்கின்றனர். ஆனால், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்கூடங்கள் அமைக்கப்படவில்லை.இந்நிலையில், அடுத்த மாதம் முதல் கோடை காலம் துவங்க உள்ளது. கடந்தாண்டு தமிழகத்தில், வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது நிழற்கூடம் இல்லாத இடங்களில், பஸ்சுக்காக காத்திருந்த மக்கள் தவியாய் தவித்தனர். எனவே, பொது மக்கள் நலன் கருதி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.