வேகத்தடையில் வௌ்ளை கோடு இல்லாததால் விபத்து அபாயம்
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி சாலையில், வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.விபத்துகளை தவிர்க்க சாலைகளை பராமரிப்பதும், மேம்படுத்துவதும் அவசியம். வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள போக்குவரத்து சிக்னல், வேகத்தடை, அறிவிப்பு பலகை, ரிப்ளக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் மாநகராட்சி பகுதியில் சாலை பராமரிப்பு சுணக்கமாகவே உள்ளது. மேலும் பள்ளி, மருத்துவமனை, திருப்பங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெள்ளை கோடு அடிக்காமல் விட்டுள்ளனர்.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பசுபதிபாளையம், கொளந்தானுார், ராமானுார் வழியாக சென்று வருகின்றனர். இதில், ராமானுாரில் இருந்து மருத்துவக் கல்லுாரி செல்லும் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதில், வேகத்தடையில் வெள்ளை கோடு பூசவில்லை. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல் ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன. இந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்கின்றன.அவர்கள், வேகத்தடை இருப்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இதனால், ஆம்புலன்ஸில் இருக்கும் நோயாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் டூவிலரில் செல்வோர் வேகத்தடை இருப்பதை தெரிந்து கொள்ள முடியாமல், தவறி விழுகின்றனர். வேகத்தடையில், வெள்ளை கோடு போட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.