சாலையின் தரம் குறித்து ஆய்வு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள ஆறு ரோடு முதல், புங்கம்பாடி செல்லும் சாலை உறுதிப்படுத்தல் பணி முடிவடைந்த நிலையில், அதன் தரத்தை கரூர் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025-26ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்குட்பட்ட, ஆறு ரோடு முதல் புங்கம்பாடி வரை 8 கி.மீ., செல்லும் சாலை, ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் உறுதிப்படுத்தல் பணி முடிவடைந்தது. அதனை கரூர் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சாலை அகலம் மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.கரூர் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் கார்த்தி-கேயன் மற்றும் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் சதாசிவம் மற்றும் உதவி பொறியாளர்கள் வினோத் குமார், அசாருத்தின், நிவேதா மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.