வெங்ககல்பட்டி இணைப்பு சாலையில்எரியாத விளக்குகளால் கடும் அவதி
கரூர்:வெங்ககல்பட்டி மேம்பாலம் பகுதியில், இணைப்பு சாலையில், மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.கரூர் அருகே வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல்லுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. வெங்ககல்பட்டி மற்றும் வெள்ளியணை சாலையில் பாலத்தின் கீழ்பகுதியில், இரு புறமும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிறகு, இணைப்பு சாலையில் இரண்டு பக்கமும், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில் இரண்டு பக்கமும் உள்ள, மின் கம்பங்களில் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.இதனால், கரூரில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியவர்கள், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திருச்சி செல்ல வேண்டியவர்கள், உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலைகளில் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும், இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது.இதனால், வெங்ககல்பட்டி பகுதி வெள்ளியணை சாலை பகுதியில், அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலையில், மின் கம்பங்களில் விளக்குகளை எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.