| ADDED : நவ 13, 2025 03:35 AM
கரூர்: தவுட்டுப்பாளையம் சர்வீஸ் சாலையில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.வேலாயுதம்பாளையம் அருகில், தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும், ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த இரண்டு மாதத்திற்கு முன், தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு பின் மூடப்பட்டது. பள்ளம் தோண்டும் போது அள்ளப்பட்ட மணல், அங்கு அருகில் இருந்த மழைநீர் வடிகாலில் கொட்டப்பட்டது. இப்பணிகள் முடிந்த நிலையில், மழைநீர் வடிகால் கால்வாய் கொட்டப்பட்ட மணலை அகற்றவில்லை. இதனால், கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது கால்வாயில் உள்ள கழிவுநீர் வெளியேறி சாலையோரம் ஓடி, தவுட்டுபாளையம் உயர்மட்ட பாலத்தின் சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கிறது. இங்குள்ள பயணியர் நிழற்கூடம் அருகில் வரை தேங்கியிருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், வடிகால் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.