கரூர் : அமராவதி அணையில் இருந்து, சாகுபடி பணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், ஆற்றுப்பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையின் நீர்மட்டம், 90 அடி. கேரளா மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலை, மூணாறு மலைப்பகுதிகள், அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அமராவதி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மே மாதம், 1ல் அணையின் நீர்மட்டம், 39.77 அடியாக இருந்தது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 42.65 அடியாக உயர்ந்தது. அமராவதி ஆற்றில் உள்ள, 18 பழைய வாய்க்கால்கள் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 25 ஆயிரத்து, 248 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வரும், ஜூலை மாதம் நெல் சாகுபடி பணிக்காகவும் தண்ணீர் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், அமராவதி ஆற்றில் கரூர் மாவட்ட எல்லை பகுதியான ஒத்தமாந்துறை முதல், காவிரியற்றில் கலக்கும் திருமுக்கூட லுார் வரை, பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. குறிப்பாக, கரூர் நகராட்சி பகுதி வழியாக ஓடும், இரட்டை வாய்க்கால் மூலம் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அதிகளவில், கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. மேலும், பெரிய ஆண்டாங் கோவில், சின்ன ஆண்டாங்கோவில், படிக்கட்டு துறை, பசுபதி பாளையம், மேலப்பாளையம், கோயம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது.அமராவதி ஆற்றுப்பகுதியில், நெல் சாகுபடி பணிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் உள்ள நிலையில், கழிவுநீர் கலப்பதை தடுக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.