மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
குளித்தலை: குளித்தலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். எலும்பு முறிவு மருத்துவர் திவாகர், மனநல மருத்துவர் பாரதி கார்த்திகா, காது, மூக்கு, தொண்டை நிபுணர் நித்தியா ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், மாற்றுத்திறனாளிகளை சோதனை செய்து, சான்றிதழ் வழங்கினர்.மருத்துவ குழுவினர் வழங்கிய சான்றிதழ் அடிப்படை யில், மாற்றுத்திறனாளிகள் செயல்திறன் உதவியாளர் ராகவன், பேச்சு பயிற்றுனர் கனகராஜ், ரைட்ஸ் திட்ட அலுவலர் கீதா மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் பங்கேற்று, புதிய அடையாள அட்டையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.மாயனுார், தரகம்பட்டி, பஞ்சப்பட்டி, அய்யர்மலை, தோகைமலை, நங்கவரம், காவல்காரன்பட்டி, மருதுார் கிராமங்களில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், எலும்பு முறிவு மருத்துவர் திவாகர் ஆகியோர் அடையாள அட்டை வழங்கினர். சிறப்பு முகாம் நாளை, நாளை மறுநாளும் நடைபெறுகிறது.