பச்சை பொய் சொல்லும் ஸ்டாலின் -கொட்டும் மழையில் கொதித்த இ.பி.எஸ்.,
சேந்தமங்கலம். ''ஜெர்மனுக்கு சென்று போட்ட ஒப்பந்தம் மூலம், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாக, முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.சேந்தமங்கலத்தில் நேற்று இரவு, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசாரத்தில், இ.பி.எஸ்., பேசியதாவது:முதல்வர் ஜெர்மனுக்கு போய், 922 ஒப்பந்தங்கள் போட்டதாகவும், 10.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 77 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாக சொன்னார். சேந்தமங்கலத்தில் யாருக்கும் வேலை கிடைத்ததா? பொய்தானே! முதல்வர் பச்சை பொய் சொல்கிறார். அவருக்கு அடுத்தாண்டு தேர்தலில் தகுந்த தண்டனை கொடுங்கள்.தேர்தலுக்கு முன் தன் அறிக்கையில், 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். 100 நாள் வேலைத்திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும், சம்பளம் உயர்த்தப்படும் என்றார். ஆனால் செய்யவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம், 100 ரூபாய் கொடுப்பதாக சொன்னார், கொடுக்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றார், ரத்து செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றார், குறைக்கவில்லை. அத்தனையும் பொய். மழை பெய்கிறது, நீங்களும் நனைந்துவிட்டீர்கள், நானும் நனைகிறேன். எவ்வளவு மழை பெய்தாலும் இங்கே காத்திருந்த உங்களை பாராட்டுகிறேன். எத்தனை அவதாரம் எடுத்தாலும், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், சேந்தமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.