கரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் திடீர் மழை
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று, திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.கேரளா மாநிலம், கடலோர பகுதிகளில், மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என, நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.கரூர் மாவட்டத்தில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. பிறகு கரூர் டவுன், திருமாநிலையூர், பெரிய ஆண்டாங்கோவில், காந்தி கிராமம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், சுங்ககேட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, 3:30 மணிக்கு குளிர்ந்த காற்றுடன் பெய்ய தொடங்கிய மழை, பல்வேறு பகுதிகளில், 4:00 மணி வரை நீடித்தது.* மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 20 ஆயிரத்து, 470 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 26 ஆயிரத்து, 774 கன அடியாக அதிகரித்தது. அதில் டெல்டா மாவட்டங்களில், சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 25 ஆயிரத்து, 304 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 650 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 17.09 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.