ஆக்கிரமிப்பால் இணைப்பு பணி இல்லை மழைநீர் வடிகால் கட்டியும் பயன் இருக்காது
கரூர், கரூர் வையாபுரி நகர், 3வது கிராஸில் மழைநீர் வடிகால் இணைப்பு பணி மேற்கொள்ளாமல் கட்டுமானம் நடப்பதால், வடிகால் கட்டியும் பயன் இருக்காது என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.கரூர் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாலை, நிழற்கூடம் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் முதல், 27வது வார்டில் வையாபுரி நகர், 3வது கிராஸில் தெற்கு, வடக்கு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, கான்கிரீட் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த வடிகாலை, கரூர்-கோவை சாலையில் செல்லும் மழைநீர் வடிகாலுடன் இணைத்தால், மழைநீர் மற்றும் வீடுகளில் கழிவுநீர் வெளியேற முடியும். இந்த மழைநீர் வடிகால் இணைக்கும் இடத்தில், அங்கு செயல்படும் உணவகம் ஆக்கிரமித்து உள்ளது. அந்த, ஆக்கிரமிப்பு அகற்றாமல், அதற்கு ஒரு அடி முன்னதாக வடிகால் கட்டுமான பணிகளை நிறுத்தி விட்டனர்.இப்படி, இணைக்கப்படாமல் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், அதில் செல்லும் கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே, மழைநீர் வடிகால் பணியை முடிப்பதற்குள், ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு, கரூர் கோவை சாலை வடிகாலுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.