அரவக்குறிச்சியில் புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது
அரவக்குறிச்சி அரவக்குறிச்சியில், 1.88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை கடத்தி சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டிக்கோட்டை பகுதியில் விரேந்தர் சிங், 24, ஆனந்தகுமார் ஆகியோர் சேலத்தில் இருந்து துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்துக்கு காரில் செல்லும்போது, ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகில் பஞ்சராகி வாகனம் நின்று கொண்டிருந்தது. அருகில் இருந்த பஞ்சர் கடைக்காரர், பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தபோது, சந்தேகிக்கும் வகையில் காரில் மூட்டைகள் இருந்ததால், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக சம்ப இடத்துக்கு, அரவக்குறிச்சி போலீசார் சென்றபோது அங்கிருந்து ஒருவர் தப்பி விட்டார். பின்னர் காரின் முன்பக்க சீட்டுகளிலும், வாகனத்தின் பின்புறமும் மூட்டைகள் இருந்தது தெரிவந்தது. இதையடுத்து அரவக்குறிச்சி டி.எஸ்.பி., அப்துல் கபூர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, ஹூண்டாய் க்ரெட்டா காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். காரில், ஒரு லட்சத்து, 88 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விரேந்தர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.