உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூடப்பட்ட சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து கிழக்கு ஸ்டேஷனாக மாற்ற வலியுறுத்தல்

மூடப்பட்ட சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து கிழக்கு ஸ்டேஷனாக மாற்ற வலியுறுத்தல்

மூடப்பட்ட சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து கிழக்கு ஸ்டேஷனாக மாற்ற வலியுறுத்தல்கரூர், அக். 29-பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட, பழமை வாய்ந்த சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து, கரூர் கிழக்கு ரயில்வே ஸ்டேஷனாக மாற்ற வேண்டும் என, கரூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈரோடு-கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்ட போது, சணப்பிரட்டியில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய பயணிகள் வராததால் கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த, 2011ல் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து, கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.சணப்பிரட்டி கிராம பகுதிகள் வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும், ஈரோடு -கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் கடந்த, 2019 ல் மின் மயமாக்கப்பட்டுள்ளது. சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து, கரூர் கிழக்கு ரயில்வே ஸ்டேஷனாக மாற்ற வேண்டும்.இதுகுறித்து, கரூர் பொதுமக்கள் கூறியதாவது:தமிழகத்தில், 21 மாநகராட்சிகளில், 12 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் திட்டம் நடை முறையில் உள்ளது. விரைவில் கரூர் மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தில் இணையும் வாய்ப்புள்ளது. இதனால், கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள, சணப்பிரட்டியில் உள்ள ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து, கரூர் கிழக்கு ரயில்வே ஸ்டேஷனாக மாற்ற வேண்டும்.இதனால், சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனில், பழையபடி ரயில்கள் நின்று செல்லும் போது, கரூர் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் குறையும். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வரும் பயணிகள், சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, கலெக்டர் அலுவலகம், நீதி மன்றம், மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும்.மேலும், மேலப்பாளையம் பஞ்சாயத்து, புலியூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகள் வரை கிராம பகுதிகள் வளர்ச்சி பெறும். இதனால், சணப்பிரட்டி ரயில்வே ஸ்டேஷனை, கரூர் கிழக்கு ரயில்வே ஸ்டேஷன் என்ற பெயரில் மீண்டும் செயல்பட, சேலம் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி