ஆற்று பாலத்தின் தடுப்பு சுவர் பழுது சரி செய்யப்படுமா
அரவக்குறிச்சி,அரவக்குறிச்சி அருகே ராஜபுரம் பகுதியில், பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்று பாலத்தின் தடுப்பு சுவர் பழுதாகி உள்ளது.அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல, இணைக்கும் முக்கிய பிரதான பாலமாக ராஜபுரம் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலம், 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு, பயனுள்ள வகையில் பாலம் அமைந்துள்ளது. பாலத்தை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை இதை கண்டு கொள்ளவிலை. பராமரிப்பின்றி பாலம் காணப்படுவதால், கைப்பிடி தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. உடைந்த கைப்பிடி சுவருக்கு பதிலாக, குச்சிகளை வைத்து தடுப்பு கட்டப்பட்டுள்ளது. மேலும் பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை துறையினர் நேரில் ஆய்வு செய்து, பாலம் தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.