கரூர் அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி மும்முரம்
கரூர்: கரூர் அமராவதி ஆற்றில், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தது.தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், நீர், நிலம், காற்று மற்றும் கடலில் பிளாஸ்டிக் மாசினை தடுக்கும் விதமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, மாதத்துக்கு ஒரு முறை பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மறு சுழற்சியாளர்கள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.இதன் அடிப்படையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, கருப்-பாயி கோவில் தெரு அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா இப்பணியை தொடங்கி வைத்தார். அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் சேர்ந்துள்ள, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணி நடந்தது.அமராவதி ஆறு மட்டுமின்றி, நீர் நிலைகளை சுற்றியுள்ள பகுதி-களில் தேங்கியிருந்த, பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சுதா, பொதுமக்கள், பள்ளி, கல்-லுாரி மாணவ, மாணவியர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.