ஆசனுார் வனத்துறை எடை நிலையத்தில் லஞ்சம் தாராளம்திம்பம் மலைப்பாதையில் மீண்டும் நெரிசல் அதிகரிப்பு
ஆசனுார் வனத்துறை எடை நிலையத்தில் லஞ்சம் தாராளம்திம்பம் மலைப்பாதையில் மீண்டும் நெரிசல் அதிகரிப்புசத்தியமங்கலம்:வனத்துறை சார்பில் நடத்தப்படும், ஆசனுார் எடை நிலையத்தில், லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக எடை ஏற்றிவரும் கனரக வாகனங்களை அனுமதிப்பதால், திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தும் அதிகரித்து விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை, தமிழகம்-கர்நாடகா இடையிலான முக்கிய வழிப்பாதையாக, தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. மலைப்பாதையில், ௨௭ கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அனைத்து கொண்டை ஊசி வளைவுகளுமே, டிரைவர் களுக்கு சவாலானவை. அனுபவம் இல்லாதவர்களால் மலைப்பாதையை கடந்து செல்வது கடினம். இவர்களாலும், மறுபுறம் அனுபவம் அதிகரித்ததால், மெத்தனமாக ஓட்டும் டிரைவர்களாலும், மலைப்பாதையில் விபத்து ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பது அடிக்கடி நடந்தது.இதை கட்டுப்படுத்தும் வகையில், கனரக வாகனங்கள், 16.2 டன் வரை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கனரக வாகனங்கள் காலை, 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே செல்ல சமீபமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதற்காக வனத்துறை சார்பில், ஆசனுாரில் எடை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் எடை போட்ட பிறகே மலைப் பாதையில் அனுமதிக்கப்படும். ஆரம்பத்தில் கறாராக இருந்ததால், மலைப்பாதையில் விபத்து குறைந்தது. போக்குவரத்தும் தடைபடவில்லை. சில மாதமாக மலைப்பாதையில் மீண்டும் விபத்து அதிகரித்து விட்டது. பெயரளவுக்கு வாகனங்களை எடை போட்டு, லஞ்சம் பெற்றுக்கொண்டு கனரக வாகனங்களை அனுப்புகின்றனர். இதனால் மீண்டும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது.காலை நேரத்தில் ஒரே சமயத்தில் ஆசனுாரிலிருந்து கீழேயும், பண்ணாரியிலிருந்து மேலேயும் மலைப்பாதையில் வாகனங்களை அனுமதிக்கின்றனர். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இதில் மாற்றம் செய்தால், நெரிசலை தவிர்க்கலாம் என்பது, விதிகளை கடைபிடித்து செல்லும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.