உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடுஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, அகரம் பாலமுருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 8ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் அமர வைக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். கோவிலை சுற்றி வலம் வந்த தேர், மீண்டும் நிலையை அடைந்தது. முன்னதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வரும், 14 வரை தைப்பூச திருவிழா நடக்கிறது. தினமும் வழிபாடு, அபிஷேகம், ரத பூஜை, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமுவேல், தாசில்தார் மோகன்தாஸ், கோவில் செயல் அலுவலர்கள் சின்னசாமி, மல்லிகா, சத்யா உட்பட பலர் பங்கேற்றனர். * கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், 88ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த, 5ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி துாக்கியும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அருகில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஞ்ரங்கதள் அமைப்பு சார்பில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, கிருஷ்ணகிரி நகரிலிருந்து கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். வழக்கத்தைவிட இந்த ஆண்டு, 60,000 மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புகழ் பெற்ற மாட்டுச்சந்தை நேற்று துவங்கி வரும், 16 வரை நடக்கிறது.* ஓசூர், ரயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள வேல்முருகன் கோவிலுக்கு பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேற பால்குடம் எடுத்து வந்தனர். காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். * ஊத்தங்கரை அடுத்த, வண்டிக்காரன்கொட்டாயில் உள்ள முருகன் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர் ஊர் நாட்டாமை தண்டபாணி, ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை