ஓசூரில் பூட்டிய வீட்டிற்குள் தீரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்
ஓசூரில் பூட்டிய வீட்டிற்குள் தீரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எழில் நகரிலுள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 3வது தளத்தில் வசிப்பவர் மணி, 52. இவரது மனைவி காளியம்மாள், 42. தள்ளுவண்டியில் மக்காச்சோளம் விற்பனை செய்கின்றனர். இவர்களது மகன்களான ஜீவானந்தம், 27, சூர்யா, 23, மொபைல் கடையில் பணியாற்றுகின்றனர். நேற்று காலை அனைவரும் வீட்டை பூட்டி வீட்டு வேலைக்கு சென்று விட்டனர். காலை, 10:30 மணிக்கு மேல், வீட்டிலிருந்து கரும் புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், மணிக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஓசூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் மணி ஈடுபட்டார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த,'டிவி' பிரிட்ஜ், கட்டில், மெத்தை, மதிப்பெண் சான்றிதழ் உட்பட, 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சுவாமி படம் முன், தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு விட்டு, குடும்பத்தினர் வெளியே சென்றுள்ளனர். அதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின்கசிவு காரணமா என, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.