| ADDED : ஜூன் 29, 2024 02:52 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் நாகேஷ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன் விளக்க உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அரசாணை எண்: 243ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களின் உணர்வுகளை புறந்தள்ளி கலந்தாய்வு பொது மாறுதலை நடத்தும் பட்சத்தில், டிட்டோஜாக் பேரமைப்பு சார்பில், தொடர் போராட்டம் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.