தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம்பணி துரிதப்படுத்த அறிவுறுத்தல்
தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம்பணி துரிதப்படுத்த அறிவுறுத்தல்தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தொப்பூர் வனப்பகுதியில் உள்ள கட்டமேடு பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மாவட்ட கலெக்டர் சதீஸ் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.மேலும், உயர் மட்ட மேம்பாலம் பகுதி தொடங்கும் இடம், கட்டமேடு, ஆஞ்சநேயர் கோவில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துகள் நடந்த இரட்டை பாலம், எலிவேட்டட் காரிடாரின் முடிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார். உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி, குறிப்பிட்ட காலவரைக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, பாளையம்புதுார் சுங்கச்சாவடி அலுவலகத்தில், தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டம் செயற்படுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதில், தேசிய நெடுஞ்சாலை சேலம் செயலாக்க திட்ட இயக்குனர் சீனிவாசலு, பாலம் கட்டுமான நிறுவன துணைத்தலைவர் சின்ஹா, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.