ஓசூரில் இரு வீடுகளில் கைவரிசை: 17 பவுன் நகை, 2 ஸ்கூட்டர் திருட்டு
ஓசூரில் இரு வீடுகளில் கைவரிசை: 17 பவுன் நகை, 2 ஸ்கூட்டர் திருட்டுஓசூர்,: ஓசூர் அருகே, தனியார் மேலாளர் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், 8.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 17 பவுன் நகை மற்றும் இரு ஸ்கூட்டரை திருடி சென்றது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் சாலையில் உள்ள ஹிமகிரி சிட்டி லே அவுட்டில் வசிப்பவர் அருண், 42. பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். கடந்த, 11 மாலை, 4:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாட, குடும்பத்தினருடன் சொந்த ஊரான தஞ்சாவூர் சென்றார். அதே லே அவுட்டில் வசிப்பவர் ரகு, 34. பெங்களூரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளார். இவரும், பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த, 9 இரவு சொந்த ஊரான திருப்பூருக்கு குடும்பத்துடன் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம கும்பல், ஹிமகிரி சிட்டி லே அவுட்டிற்குள் புகுந்து, அருண் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 12 பவுன் நகை, சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டர் மற்றும் ரகு வீட்டிற்குள் புகுந்து, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 5 பவுன் நகை, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகியவற்றை திருடி சென்றனர்.அருண் மற்றும் ரகு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களுக்கு நேற்று முன்தினம் மொபைல்போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். அருண், ரகு தனித்தனியாக நல்லுார் போலீசில் புகார் செய்தனர். அருண் வீட்டிலிருந்து, 5 கைரேகைகளும், ரகு வீட்டில் இரு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.