சாலை குழிகளில் மண்ணை கொட்டியதால் நிலை தடுமாறும் டூவீலர் வாகன ஓட்டிகள்
ஓசூர்: ஓசூர் அருகே, பல்லாங்குழி சாலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளத்தில் மண் கொட்டி உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுாரில் இருந்து கர்நாடகா மாநிலம், சர்ஜாபுரம் நோக்கி, மாநில நெடுஞ்சாலை செல்கிறது. பாகலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கும் இச்சாலையில் டிப்பர் லாரிகள், தனியார், அரசு பஸ்கள் என தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை துவக்கத்தில் இருந்தே மிகவும் மோசமாக காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கு பள்ளங்கள் உருவாகி உள்ளன. அதனால், மிதமான வேகத்தில் கூட வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இச்சாலையில் மிகவும் மெதுவாக வாகனங்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சர்ஜாபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள அபாய பள்ளங்களை, பேட்ஜ் ஒர்க் செய்து மூடாமல், நெடுஞ்சாலைத்துறையினர் மண் கொட்டி சரி செய்துள்ளனர். அதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண்ணில் சறுக்கி நிலைதடுமாறி வருகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், மோசமான பள்ளங்களை பேட்ஜ் ஒர்க் செய்து, சாலையை சரிசெய்ய, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.