மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்147 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்147 மனுக்களுக்கு உடனடி தீர்வுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி, ஓசூர் மற்றும் போச்சம்பள்ளியில் திருப்பத்துார் மெயின் ரோட்டில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் பவுன்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரம், பழனிவேல், அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, சூளகிரி, எம்.சி.,பள்ளி, பர்கூர், பெத்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் மனு அளித்தனர். இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்வது, தெருவிளக்குகள், குறை மின்னழுத்தம் மற்றும் மின் கட்டண பிரச்னை, மின் கட்டண மீட்டர் மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில், மின் கட்டண முறை பிரச்னையில், 27 பேர், புதிய மீட்டர், 17 பேருக்கு வழங்கல் உள்பட, 147 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. குறை மின்னழுத்தம் உள்ளிட்ட வகை பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.